திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ஆம் தேதி போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.