"இது எங்களுடைய உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் பேசிக்கொள்வோம்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் இருந்து வந்தது. பா.ம.க-வின் சிறப்பு பொதுக் குழுவில் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதன் பின்னர் இருவரும் சமாதானமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து, தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட அன்புமணி, ‘நான் தான் பாமக தலைவர்’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு செய்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியில், “இது எங்கள் உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம். மருத்துவர் ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதல் படி, அவரின் கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஆளுங்கட்சியாக நிலைநாட்ட நாங்கள் சேர்ந்து கடுமையாக உழைப்போம்” என்றார்.