“உயிருக்கு அச்சுறுத்தல்...” அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி பரபரப்பு புகார்!

காவல் துறை விசாரணையில் பலியான அஜித்
காவல் துறை விசாரணையில் பலியான அஜித்
Published on

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபியிடம் கடிதம் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியாகினார்.

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.

நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான சக்தீஸ்வரன் காவலர்கள் அஜித்குமார் தாக்கியது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கின் பிரதான சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார்.

இந்த நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சி கூறியதை தொடர்ந்து, போலீஸுடன் தொடர்பில் உள்ள ரெளடிகள் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். கைதான காவலர் ராஜா என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் உள்ளார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உள்ளூர் அல்லாமல் வெளிமாவட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com