“இன்றைக்கு ஆயுதங்கள் துப்பாக்கிகள் அல்ல, அல்காரிதங்கள் தான்”

கவுதம் அதானி
கவுதம் அதானி
Published on

கணினி தொழில் நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக வேண்டும் என தொழிலதிபர் கவுதம் அதானி கூறியுள்ளார்.

காரக்பூர் ஐஐடியின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது: “வழக்கமான போர்களில் இருந்து தொழில்நுட்ப போர்களுக்கு உலகம் மாறிவிட்டது. எதிர்காலத்தை நிர்ணயிப்பது நமது தயாரிப்புத் திறன்தான். இன்றைய போர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக உள்ளன. அவை போர்க்களத்தில் அல்ல, கணினி சர்வர்களில் நடக்கின்றன. துப்பாக்கிகள் அல்ல, ‘அல்காரிதங்கள்’ தான் ஆயுதங்கள். நிலத்தில் அல்ல, ‘டேட்டா சென்டர்களில்’ தான் பேரரசுகள் உருவாகின்றன. வீரர்கள் அல்ல, ‘பாட்நெட்கள்’ தான் படைகள்.

நம் நாடு தொழில்நுட்பத்தை சார்ந்துள்ள நிலையில், 90% குறைக்கடத்திகளை இறக்குமதி செய்கிறோம். இதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் முடங்கிப் போகும் அபாயம் உள்ளது. நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். இதனால் உலகில் எங்கோ நடக்கும் புவி அரசியல் நிகழ்வுகூட நமது வளர்ச்சியை தடுக்கக்கூடும்.

எனவே, புதிய வகை போர்களுக்குத் தயாராகும் நமது திறன்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இதற்கு அனைத்து துறைகளிலும் நாம் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்.” இவ்வாறு அவர் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com