அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் டிரம்ப்!

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திடவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள கல்வித் துறை செயலாளருக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

முதல்முறையாக அதிபராக பொறுப்பேற்றபோதே கல்வித் துறையைக் கலைக்கும் பணிகளை டிரம்ப் மேற்கொண்டார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திடவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க கல்வித்துறையின் கீழ் 1,00,000 அரசுப் பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவிகித செலவீனங்களை மாகாண அரசுகள் வழங்குகின்றன.

ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறையே கவனித்து வருகின்றது. 1.6 டிரில்லியன் டாலர் கடன் தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்வித் துறையைக் கலைத்து அனைத்து நிர்வாகத்தையும் மாகாண அரசிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கல்வியின் தரத்தை கண்காணிக்கும் துறையை எப்படி கலைக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, நிதி பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கான நிதியையும், சிறப்பு மாணவர்களுக்கான திட்டங்களையும் அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் கல்வித் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க கல்வித் துறையின் ஊழியர்கள் 1,300 பேரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை டிரம்ப் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com