டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது – மக்கள் முன்பு அமைச்சர் மூர்த்தி உறுதி!

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி
Published on

மதுரை மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காவல்துறையின் தடையை மீறி நரசிங்கம்பட்டி பெருமாள் மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கி.மீ. தூரம் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தினர்.

அந்த போராட்டத்தின் முடிவில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் எனவும், தமிழக அரசு நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”தமிழக அரசு டங்ஸ்டன் வருவதை ஒருபோதும் ஏற்கவில்லை. மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.” என உறுதியாக தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com