மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்கடந்த ஆண்டு நடந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த தவெகவினர் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.
இதனையடுத்து போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் 25ஆம் தேதியை தொடர்ந்து 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் என கூறிவிட்டு சென்றனர். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்த தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று வருகிற 21ஆம் தேதி மதுரையில் தவெக 2ஆவது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கட்சி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் மாநாட்டுக்கான தேதி அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர்.