வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
Published on

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தனர்.

இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசியதாவது:

“அதிமுக தொண்டர்கள் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் இணைவதற்கு இபிஎஸ் ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

மதுரை வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி எனது தலைமையில் மாநாடு நடைபெறும். அது வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய மாநாடாக இருக்கும். மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் இன்றுவரை நன்றாக இருக்கிறது. வருங்காலங்களில் அவரது அரசியல் முடிவுகள் ஜனநாயக ரீதியில் இருக்கிறதா என்பதை பார்த்து அவருக்கு எங்களின் தார்மீக ஆதரவு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com