ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது? சிறந்த நடிகைக்கான விருது ஏன் பகிர்ந்தளிக்கப்படவில்லை” என்று திரைப்பட தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும், விக்ராந்த் மாஸேவும் வென்றனர்.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மலையாளத்திலிருந்து நடிகர் விஜய ராகவனுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ஊர்வசிக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேசிய விருதுகள் குறித்து பேசிய நடிகை ஊர்வசி, “ஷாருக்கானை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதற்கான அளவுகோள்கள் என்ன? சிறந்த மூத்த நடிகரான விஜய ராகவனை வெறும் துணை நடிகராக எப்படி குறுக்கலாம்? அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் விருது வழங்கியிருக்க வேண்டாமா?
விஜய ராகவன் நடித்த பூக்காலம் திரைப்படத்தில் அவரின் இணையாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகிறார்கள். ஆனால், அக்கதாபாத்திரத்திற்கு தினமும் 9 மணிநேரம் ஒப்பனை செய்ய வேண்டுமென்றதால் அப்படத்திலிருந்து விலகினேன்.
பல கோடி கொடுத்தாலும் நான் சில விஷயங்களைச் செய்ய மாட்டேன். அப்படத்திற்காக விஜய ராகவன் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார்? அவரை எப்படி துணை நடிகர் எனச் சொல்லி விருது கொடுக்க முடிகிறது? ஷாருக்கானுடன் ஒப்பிடும்போது இவர் நடிப்பை எப்படி மதிப்பிட்டார்களோ!
ஏன் இந்தாண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்படவில்லை. என்ன நெறிமுறைகள் இவை? வேறு ஏதாவது அளவுகோள்கள் இருக்கின்றனவா? தமிழில் நான் நடித்த ஜே. பேபி திரைப்படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரையில் இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்தார்களா இல்லையா?
நீங்கள் கொடுப்பதையெல்லாம் அமைதியாக வாங்கிச் செல்ல தேசிய விருதுகள் ஒன்றும் அரசு ஓய்வூதியப் பணங்கள் கிடையாது. நீங்கள் ஒன்றை கொடுத்தால், அதை நாங்கள் மகிழ்ச்சியாகப் பெற வேண்டும்.
மலையாளத்தின் சிறந்த திரைப்படமான ஆடுஜீவிதம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கான தேசிய விருதுகள் குறித்து மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி குரல் எழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஊர்வசியின் இந்தக் கண்டனக் குரல் மலையாளத் திரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், தேசிய விருதை வாங்க ஊர்வசி செல்வாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது!