அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் இனி ஆண் – பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியுள்ளார்.
“அமெரிக்காவின் பொற்காலம் இன்று தொடங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்று பேசத் தொடங்கிய டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.
இது தவிர, விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்க வளைகுடா என மாற்றப்படும் என்றார்.
பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள்தனமான பரிசு என்று கூறியவர், அதைத் திரும்பப் பெறுவோம் என்றார்.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பேன் என்று கூறிய அவர்,
உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் அமெரிக்கா மாறும் என்றார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும் என்றார்.
இன்று முதல் அமெரிக்க அரசின் கொள்கைப்படி ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றவர், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் கூறினார். அதேபோல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.
உலகிலேயே அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்துவோம் என்றார்.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் பிரதமர் மோடி எழுதிக் கொடுத்த கடிதத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.