இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘வானம் கலைத் திருவிழா’வில் தடை செய்யப்பட்ட திரைப்படம்!

இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘வானம் கலைத் திருவிழா’வில் தடை செய்யப்பட்ட திரைப்படம்!
Published on

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் வானம் கலைத் திருவிழாவில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட‘சந்தோஷ்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடி வருகிறது இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம். ‘வானம் கலைத் திருவிழா’என்கிற தலைப்பில் நடைபெறும் இந்த விழாவில் கண்காட்சி, திரைப்பட, ஆவணப்பட விழா, வேர்ச்சொல், நாடக விழா, ஓவியக் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி ஆகியவை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன.

வானம் கலைத்திருவிழா நாளை (ஏப்ரல் 1) தேதி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

முதல் நிகழ்வாக ’தலித் வரலாற்று மாதக் கண்காட்சி’ நீலம் புத்தக அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் எழுத்தாளர் இமையம், கவிஞர் சுகிர்தராணி, பேராசிரியர் சு. ஆம்ஸ்ட்ராங், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் ’பிகே ரோஸி திரைப்பட விழா’ சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள சந்தோஷ் திரைப்படம் திரையிடப்படுகிறது. விடுதலை, கொட்டுக்காளி, தங்கலான் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை பி.கே. ரோஸீ ஆவணப்பட குறும்பட விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள மேக்ஸ் முல்லர் பவனில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 12, 13 தேதிகளில் தலித் இலக்கிய கூடுகை நிகழ்வான வேர்ச்சொல் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 18ஆம் தேதி எழும்பூர் அருங்காட்சியகத்தில் தம்மா நாடக விழா நடைபெறுகிறது.

ஏப்ரல் 23 முதல் 29 வரை லலித் கலா அகாடமியில் ’வரைகோடு தலித் கலையும் அழகியலும் ஓவியக் கண்காட்சி’ நடைபெறுகிறது.

ஏப்ரல் 23 முதல் 29 வரை நித்தம் புகைப்பக் கண்காட்சி லலித் கலா அகடாமியில் நடைபெற உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com