’என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’கதையாக தான் அடுத்து இயக்க திரைக்கதை தயார் செய்து வைத்திருக்கும் ‘வேள்பாரி’ கதையை அடுத்தடுத்து இயக்குநர்கள் தங்கள் படங்களுக்கு சுட்டுக்கொண்டே இருப்பதால் விரக்தியின் உச்சத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினி நடிப்பில் ஷங்கரின் ‘2.0’ வெளியான பின் கடந்த எட்டு ஆண்டுகளாக ஷங்கரை ஏழரை பிடித்து ஆட்டிவருவதால் தொடர்ந்து படு தோல்விகளையே சந்தித்து வருகிறார். ‘இந்தியன் 2’, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் அவரது மார்க்கெட்டையே காலி செய்தன. இதனால் அவர் அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டிருந்த சு.வெங்கடேசனின் வேள்பாரி தாமதமாகிக்கொண்டே வந்தது.
ஷங்கரின் நடிப்பில் ஒரு படமாவது நடித்துவிடமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த பலரும் பின் வாங்கிய நிலையில் முன்னணி தயாரிப்பாளர்களும் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை.
இடைப்பட்ட காலத்தில் இந்த வேள்பாரி நாவலில் இருந்த பல காட்சிகள் ‘ஆர் ஆர் ஆர்’, ‘காந்தாரா’ போன்ற சுமார் அரைடஜன் படங்களில் தயவுதாட்சண்யமின்றி திருடி வைக்கப்பட்டன.
படம் நகராமல் இருந்தது போலவே இப்படி காட்சிகள் பறிபோனதற்காகவும் கடும் மன உளைச்சலில் இருந்த ஷங்கருக்கு லேட்டஸ்ட் பேரிடியாக வந்திருக்கிற செய்தி, தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தமிழ்க்கடவுள்’ முருகன் படத்துக்கும் வேள்பாரியில் இருந்து ‘முருகன் - வள்ளி தொடர்பான காட்சிகள் பல அப்படியே உருவப்பட்டுள்ளனவாம்.
இப்போது நாவலின் முன் அட்டையும் பின் அட்டையும் மட்டுமே மிச்சம் வைக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வது எங்கே போய் நம் ஆதங்கத்தை ஒப்பாரி வைப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறாராம் ஷங்கர்.