இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி (வயது- 79) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் குறைவு உள்ளிட்ட மருத்துவக் காரணங்களால் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் யாரை வேட்பாளராக நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதியான சுதர்ஷன் ரெட்டி, 1946ஆம் ஆண்டு தெலங்கானாவில் பிறந்தவர். கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய இவர், 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்.