இந்தி மொழி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு கடந்த ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 88 வயதாகும் அவர், இந்த விருதைப் பெறும் முதல் சத்திஸ்கர் மாநிலத்தவர் எனும் பெருமையையும் பெறுகிறார்.
இலக்கியத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதை, 59ஆவது ஆண்டில் இவர் பெறுகிறார். இதுவரை 12 இந்திப் படைப்பாளிகளுக்கு ஞானபீட விருது கிடைத்துள்ளது.
விருதுடன் 11 இலட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விருது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்க்கரை நோயாளியான எனக்கு இ(ந்த விரு)து இனிப்பாக இருக்கும் என்று சொல்லமுடியாது என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மேலும், ” வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்துவிட்டேன், எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் நான் விரும்பியதை எழுதிவிட்டேனா எனக் கேட்டால், இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்றுதான் சொல்வேன். மீதமிருக்கும் காலத்தில் எழுதவேண்டும்; ஆனால் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் என்னால் எவ்வளவு வேகமாக எழுதிவிட முடியும் எனத் தெரியவில்லை.” என்றும் வினோத் குமார் சுக்லா கூறினார்.