‘அத்துமீறுகிறோம் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்’ - நீதிபதி கவாய்

நீதிபதி பி.ஆா்.கவாய்
நீதிபதி பி.ஆா்.கவாய்
Published on

நாடாளுமன்ற அதிகாரத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறோன் என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற வன்முறையில் 3 போ் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூவா் குழு அமைத்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோல, ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாசப் படங்கள் வெளியிடப்படுவதை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள் வெளியிடுவதைத் தடுக்கக் கோரும் மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆா். கவாய், ‘இதை யாா் கட்டுப்படுத்துவது? இதற்கு மத்திய அரசுதான் ஒழுங்கு நடைமுறைகளை வகுக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவதாக ஏற்கெனவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறோம்’ என்று மனுதாரா் தரப்பில் ஆஜரான விஷ்ணு சங்கா் ஜெயினிடம் தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த உத்தரவிடக் கோரி கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளதை நீதிபதிகள் அமா்வில் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் விஷ்ணு சங்கா் ஜெயின், மேற்கு வங்கத்தில் அதன் பிறகு நிகழாண்டு வரை நிகழ்ந்த வன்முறைகளைக் குறிப்பிட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போதும், ‘நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவதாக ஏற்கெனவே விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறோம்’ என்று நீதிபதி பி.ஆா்.கவாய் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com