“டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“கடந்த 2022-ஆம் ஆண்டு டெல்லிப் பயணத்தின்போது, அங்கு நான் கண்ட மாதிரி பள்ளிகள் போல் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்றேன்.
சொன்னபடி, மாவட்டத்திற்கு ஒன்று என 38 மாதிரிப் பள்ளிகளை உருவாக்கினோம். இப்போது அதற்கான நிரந்தர உட்கட்டமைப்பை உருவாக்கி, முதல் கட்டடத்தை திருச்சி மாவட்டம் துவாக்குடியில் திறந்து வைத்திருக்கிறேன்!
டெல்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருக்கிறது!
ஏற்கெனவே நம்முடைய மாதிரிப் பள்ளிகளில் பயின்ற 977 மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களிலும் - பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் பயிலுகின்றனர்.
இந்த மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர உழைப்போம்! அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றி வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.