‘சொல்லாற்றல், பலமாக இருக்கவேண்டுமே தவிர, பலவீனமாக மாறிவிடக் கூடாது’ என்று அமைச்சர் பி.டி.ஆருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாகவும், தன்னிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
இந்த சூழலில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், "தமிழ்வேள்" பி.டி.ராஜன் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு எரிகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லாற்றல் மிகுந்தவர் என்றும், ஆனால் அவரது சொல்லாற்றல், பலமாக இருக்கவேண்டுமே தவிர, பலவீனமாக மாறிவிடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். என் சொல்லை தட்டாதவர் பிடிஆர்; இதையும் புரிந்துகொள்வார் என அவர் கூறினார்.
விழாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், இன்றைக்கு நாட்டையே சர்வாதிகார இருள் சூழ்ந்துள்ளது. மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், அதனை எதிர்த்துப் போராடி, பல வெற்றிக்களை குவித்து, நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்.
அதற்கு மிக சமீபத்திய உதாரணமாக, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மேற்கொண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளின் மாண்பை காக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கூறலாம். அவர் மேற்கொண்டு இத்தகைய முயற்சிகளை பார்க்கும் போது, முத்தமிழர் அறிஞர் கலைஞருக்கு மிகவும் பிடித்த விபி சிங் அவர்களை சமூக நீதி காவலர் என நான் அழைப்பது போல், நமது முதல்வர் ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்க தோன்றுகிறது..
ஆட்சி நிர்வாகம் ஒரு புறம் என்றால், மறுபுறம் திராவிட இயக்க கொள்கைகளை, தத்துவங்களை இன்னும் 100 ஆண்டுகள் நிலைபெற செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பல முயற்சிகளை தலைவர் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.