‘தி.மு.க.விடம் அதிக இடங்களை கேட்போம்’ – சி.பி.எம்., வி.சி.க.!

பெ. சண்முகம்  - தொல். திருமாவளவன்
பெ. சண்முகம் - தொல். திருமாவளவன்
Published on

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்போம் என சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகமும், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனும் கூறியுள்ளனர்.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுக எத்தனை இடங்களை ஒதுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், “திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் அவசியம் உள்ளது. அதற்கேற்ப திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்.

கடந்த 2021- தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை வரும் தேர்தலில் தொடரக்கூடாது.

2026 சட்ட சபை தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும்." என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும். குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்களும் அப்படித்தான் சொல்கிறோம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெற முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான். இது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில் அவர்கள உருவாக்கக்கூடிய குழுவிடம்தான் பேசுவோம். அவர்களும் அதே மாதிரி எல்லா கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்களும் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள். அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம்.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com