தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட, செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனைக்கூட்டத்தின்போது தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப்போட்டியா? என்பது பற்றி இப்போது பதில் கூற முடியாது. அந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால், தேர்தலில் தனித்துப்போட்டியிட தே.மு.தி.க. தயங்காது. கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தே.மு.தி.க. மாநாடு நடைபெறும்.
தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தொடர்பாக அ.தி.மு.க. ஏற்கனவே அறிவித்ததில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது ஆண்டு குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லை என்று கூறினார். எழுத்துப்பூர்வமாக தருவதைவிட எனது வார்த்தைகள்தான் முக்கியம் என்று அவர் உறுதியும் கொடுத்தார். தற்போது தே.மு.தி.க.வுக்கு 2026ஆம் ஆண்டு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொறுத்தார் பூமி ஆள்வார். நிச்சயமாக அதற்கான காலம் வரும்.” என்றார்.