தங்க நடைக்கடன் தொடர்பான புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புதிய நடைமுறை பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் சுட்டிக்காட்டியுள்ளர்.
தங்கம் தென்னரசு - நிதியமைச்சர்
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
ராமதாஸ் - பாமக நிறுவனர்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்கும் இந்த புதிய விதிமுறைகள் கண்டிக்கத்தக்கவை.
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும், அனைத்து வகையான தங்கத்திற்கும் நகைக்கடன் வழங்கப்படாது, குறிப்பிட்ட தன்மை கொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்பதும் தான். இந்த இரு விதிகளும் நகைக்கடன் பெறுவதற்கு பெரும் தடையை ஏற்படுத்தக்கூடும்.
நகைகளை அடகு வைப்பவர்கள், அதன் உரிமைக்கான சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவை, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பொறுத்தவரை நகைகள் எனப்படுபவை குடும்பச் சொத்துகளாகவே கருதப்பட்டு வருகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய நகைகளுக்கு அவை வாங்கப்பட்டதற்கான ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமல்ல.
நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்கு இணையான வேறு ஆவணங்களையோ அல்லது உறுதிமொழிச் சான்றையோ அளித்து கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனாலும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக்கூடாது என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி நகைக்கடன் மறுக்கப்படக்கூடும்.
அதேபோல், ரிசர்வ் வங்கியின் நான்காவது விதியின்படி வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். இதனால் வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்களால் நகைக்கடன் பெற முடியாது.
தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். ஏற்கனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதை நீட்டித்துக் கொள்ள முடியாது; அடகு வைத்த நகையை மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் கடன் பெற முடியும் என்ற நிபந்தனையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதிய வரைவு விதிகள் நகைக்கடன் பெறுவதை மிகவும் சிக்கலாக்கி விடும். வங்கிகளுக்கு பதிலாக தனியார் நகை அடகுக் கடைகளையும், கந்து வட்டிக்காரர்களையும் அணுக வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் அல்லது நகைக்கடன் வழங்குவதற்கான இப்போதைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.