'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். நான் சொல்வது தான் நடக்கும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி இடையேயான மோதல்போக்கு காரணமாக தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் (ஆகஸ்ட் -9) அன்புமணி தலைமையில் பாமக பொதுக் குழுக் கூட்டம் ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக நடைபெற்றது. பொதுக்குழு கூட்ட மேடையில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் நேற்று மாலை பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், அன்புமணியின் படம் எங்கும் இடம்பெறவில்லை. மாநாட்டு நுழைவாயில் முகப்பில் ராமதாஸ் மற்றும் அவரின் மனைவி சரஸ்வதியின் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இந்த மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதியும் கலந்து கொண்டு மாநாட்டின் முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர். மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து ராமதாஸ் பேசியதாவது: “பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. அவர்களுக்கு ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, தீமைகளை அழிக்கும் சக்தி உண்டு. ஆண்களுக்கு என்ன சக்தி இருக்கிறது என்பதை நாமே எண்ணிப் பார்க்க வேண்டும். குரு உயிரோடு இருக்கும் போது, அவரை என் மூத்த பிள்ளை என்று சொல்வேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், எந்த அளவுக்கு சிறப்பாக நடத்துவாரோ, அதே அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம், பெரியகோவிலும். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் கோவிலும் தான்,' என்றார். இது அருமையான வார்த்தை.
கல்வியில் பெண்கள் முதன்மையாக இருக்கிறார்கள். தொழில் செய்வதிலும் அவர்கள் முன்னோக்கி வருகிறார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அப்படி செய்தால், தமிழகத்தில் இருக்கும் 320 சமுதாயங்கள், நாங்கள் யார்?, எங்களின் ஜனத்தொகை என்ன? எங்களின் வாழ்விடம் எப்படி இருக்கிறது?, சமூக நிலைமை என்ன? என்பது எல்லாம் தெரிய வரும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என் அருமை நண்பர் கருணாநிதி கொடுத்தார். 108 சமுதாயங்கள் பயன்பெற்றன. இப்போது, தந்தையை மிஞ்சிய தனயனாக நீங்கள், இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பை ஏன் எடுக்கக் கூடாது? பக்கத்து மாநிலங்கள் இந்தக் கணக்கெடுப்பை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஏன் தயக்கம்? ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இந்த சமூக சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
10.5 இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே அதிரும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை செய்தால் தமிழகம் தாங்காது. மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்வோம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் நடத்துவீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் தெருவிலோ, வீட்டிலோ இருப்பவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இல்லாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் போராட்டம் நடத்துங்கள். என்னை கூப்பிட்டாலும் நான் அந்தப் போராட்டத்திற்கு வருகிறேன்.
ஒரு 3 மாதம் என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று கேட்க மாட்டேன். அது சாத்தியம் அல்ல. ஆனால், ஒரு 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்லும் யோசனைகளை கேட்டு நடவடிக்கையை எடுங்கள். இந்த சமூகத் தீமை உங்களால் ஒழிக்கப்படலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்து அதை செய்வோம் என்று சொல்வதை விட, சுலபமாக உங்களின் ஆட்சியில் செய்யலாம். அப்படி நடக்கவில்லையெனில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்த இரு தீமைகளையும் ஒழிப்போம்.
இங்கு ரோடு நல்லா இருக்கிறது. இரவு நேரமாக உள்ளது, மணிக்கு 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாதீர்கள். உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது. மாநாடு முடிந்து செல்கையில் ஒரு சிறு விபத்து கூட நடக்கக்கூடாது. வேகமாகச் சென்று என்ன சாதிக்கப்போகிறோம்? என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்கள் ஜாக்கிரதையாக ஊருக்கு போய் சேருங்கள்.
2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வது தான் நடக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பேராசிரியர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு. த. அருள் மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.