வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்த சம்பவத்தில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசு, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றம் நடந்துள்ளதாகவும், முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டார்.
மேலும் வேங்கை வயல் குடிநீர் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடிய மனு மீதான விசாரணை பிற்பகல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.