தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவியேற்பு! - யார் இவர்?

ஞானேஷ் குமார்
ஞானேஷ் குமார்
Published on

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். 2029 ஜனவரி வரை பதவியில் நீடிப்பார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய தலைமை ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இன்று 26ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவி ஏற்றார். 65 வயது பூர்த்தி ஆகும் வரை, தேர்தல் ஆணையத்தில் பணியாற்றலாம். எனவே, 2029ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை அவர் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பார். இதையடுத்து தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஞானேஷ்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

யார் இந்த ஞானேஷ்குமார்?

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோவில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

61 வயதான ஞானேஷ்குமார், ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்தை பெற்றிருக்கிறார். 1988ஆம் ஆண்டு கேரளா ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்தவராவார். சமீபத்தில் இவர் உள்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளர் (காஷ்மீர் பிரிவு) பதவியை வகித்திருந்தார். அமித்ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், அமித்ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

மேலும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் செயலாளராகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்கிறார். கல்வியை பொறுத்த அளவில், கான்பூரில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் சிவில் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com