அடுத்தடுத்து பாயும் அதிரடி நடவடிக்கை! - யார் இந்த ஜெயராம் ஐ.பி.எஸ்.?

ஏடிஜிபி ஜெயராம்
ஏடிஜிபி ஜெயராம்
Published on

தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

16 வயது சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏடிபிஜி ஜெயராம் நேற்று நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஏடிஜிபி ஜெயராமை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, குற்றமற்றவா் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும்.

யார் இந்த எச்.எம்.ஜெயராம் ஐ.பி.ஸ்.?

கர்நாடகாவைச் சேர்ந்த எம்.எம்.ஜெயராம் கன்னடம் மொழியில் முதுகலைப் பட்டமும், வரலாற்றுத்துறையில் எம்.பில். பட்டமும் பெற்று, பி.எச்.டி.யும் முடித்துள்ளார்.

கர்நாடக அரசின் குரூப் – பீ தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், காவலர் ஆக வேண்டும் என்ற ஆசையில், தன்னுடைய 24ஆவது வயதில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார். அதன்படி 1996ஆம் ஆண்டு பேட்சில் தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியானார். கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு ஏ.எஸ்.பி.யாக பணியைத் தொடங்கியவர், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றியுள்ளார்.

பதவி உயர்வின் மூலம் வேலூர், தஞ்சை, கோவை சரக டி.ஐ.ஜி. ஆகவும் சென்னை காவல் துறை இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

அடுத்தகட்ட பதவி உயர்வில் மேற்கு, மத்திய மண்டலங்களின் ஐ.ஜி., சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழக காவல் துறையின் ஆபரேஷன் ஏ.டி.ஜி.பி., குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.ஜி.பியாகவும் பணி செய்துள்ளார். அவர் தற்போது ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தநிலையில், நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில்,ஜெயராமை இடைநீக்கம் செய்யக்கோரி தமிழக அரசுக்கு காவல் துறை பரிந்துரை செய்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com