‘தமிழ்நாடு, தமிழர் என்றால் ஏன் ஜி அலர்ஜி?’ – ஸ்டாலின், மோடியை விளாசிய விஜய்!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

“பிரதமர் மோடியிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாட்டை ரொம்ப கவனமாக கையாளுங்கள். பலருக்கும் தண்ணீர் கட்டிய மாநிலம் இது. பார்த்து செய்ங்க மோடி. மறந்துடாதீங்க.” என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பனையூரில் நடைபெற்று வரும் தவெக பொதுக்குழுவில் விஜய் பேசியதாவது:

“கதறல் சத்தம் எப்படி இருக்கிறது? அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டையே சுரண்டி வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல்? அதுதான் நம் அரசியல்.

காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினந்தோறும் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மன்னராட்சியை நடத்திக் கொண்டு உள்ளனர்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி என்கிற ஸ்டாலின் அவர்களே என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே, அதை செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும்.

ஒன்றிய ஆட்சியை பாசிச ஆட்சி என சொல்கின்ற நீங்கள், இங்கு மட்டும் என்ன ஆட்சி நடக்கின்றதாம்? இதுவும் பாசிச ஆட்சிதானே. எங்கள் கட்சியினரை சந்திக்கத் தடை போடுகிறீர்கள். சட்டத்தை மதிக்க வேண்டும் என அமைதியாக இருக்கின்றோம்.

இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆட்சியை கேள்வி கேட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது. ஒழுங்காக ஆட்சி நடத்தினால், சட்ட ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். இங்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில்வேற உங்களை அப்பா என கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

உங்களின் ரகசிய முதலாளி உங்களைவிட மேல். மாண்புமிகு மோடி ஜி அவர்களே. உங்கள் பெயரை சொல்வதற்கு எங்களுக்குப் பயம் இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது சொல்லிவிட்டேன். ஓட்டுக்காக காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி, கொள்ளை அடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி. பாஜக பெயர் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளீர்கள்.

ஊழல்வாதிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு ஏன் ஜி தமிழ்நாடு தமிழர் என்றால் ஏன் ஜி அலர்ஜி?

எங்களிடமிருந்து ஜிஎஸ்டி வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் பணம் ஒதுக்க மாட்றீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என அறிவித்தபோதே மோடியின் திட்டம் என்னவென்பது புரிந்து விட்டது.

மோடியிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாட்டை ரொம்ப கவனமாக கையாளுங்கள். பலருக்கும் தண்ணீர் கட்டிய மாநிலம் இது. பார்த்து செய்ங்க மோடி. மறந்துடாதீங்க.

தவெக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீத உறுதி செய்வோம். சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும். கல்வி, மருத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்துவோம். அரசு ஊழியர்களுக்குத் துணை நிற்போம். என்றும் நாங்கள் உழைக்கின்றவர்கள் பக்கம்தான்.

logo
Andhimazhai
www.andhimazhai.com