‘ப்ரீடம்’ ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது?

ப்ரீடம் திரைப்படம்
ப்ரீடம் திரைப்படம்
Published on

‘இன்று முதல் தமிழகமெங்கும்’ என ‘ப்ரீடம்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தாலும் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

'ப்ரீடம்' ப்ரீடமாக ரிலீசாவதில் என்ன சிக்கல்?

சசிகுமாரின் படம் இப்படியான சிக்கலில் மாட்டுவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே சத்ய சிவா இயக்கிய ’நான் மிருகமாய் மாற’, முத்தய்யா இயக்கிய ’கொடி வீரன்’ போன்ற திரைப்படங்கள் தப்பிப் பிழைத்தே வெளியாகின.

தற்போது அதே பிரச்னையைத்தான் ’ப்ரீடம்’ திரைப்படமும் எதிர்கொண்டுள்ளது.

பத்திரிகையாளர் காட்சி, தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் என வெளியீட்டுக்குத் தயாரான ‘ப்ரீடம்’, ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படம் வெளியாகவில்லை என்றதும், ’இதனால்தான் படம் வெளியாகவில்லை’ என பலரும் பலவிதமான பேசினார்கள்.

ஈழப்பிரச்னை, ராஜீவ்காந்தி படுகொலை, காவல் துறை சித்ரவதை, மலையாளி காவலர் பற்றிய சித்தரிப்பு போன்றவற்றால் படத்துக்கு யாரேனும் தடை கோரியிருக்கலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், விசாரித்துப் பார்த்ததில், மேற்கூறிய எந்த விசயத்தாலும் இல்லையாம்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகி இருக்க வேண்டிய ‘ப்ரீடம்’ திரைப்படம், இப்போது வெளியாவதே சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளரான பாண்டியன் பரசுராமன் பைனான்ஸ் வாங்கியே இந்த படத்தை எடுத்தாராம். இத்தனை ஆண்டுகளாக படம் வெளியாகமல் இருந்ததால் வட்டி குட்டி போட்டிருக்கிறது. இதனால் பைனான்ஸ் வாங்கிய இடத்தில் செட்டில்மெண்ட் செய்யவில்லையாம் தயாரிப்பாளர்.

தற்போது படக்குழு அதை பேசி சரிகட்டிவிட்டதாகவும் நாளை படம் வெளியாகலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்த சினிமா வட்டாரத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com