தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா?- முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

திமுக கூட்டணியில் பாமக இணையப் போகிறது என்ற தகவலில் எந்த உணமையும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பதிலளித்துள்ளார். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை திமுக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ள முதலமைச்சர், தொகுதி மறுசீரமைப்பை முடக்க முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் தொகுதி மறுசீரமைப்பு ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டதாகவும், அதே போன்று தற்போது மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டும் இதுவரை நேரம் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக சாடிய முதலமைச்சர், இந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக தோற்கடிப்பார்கள் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க பாஜக மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக திணிப்பதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளதால், மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்றும் பாமக இணையும் என்றும் கூறப்படுவது வதந்தி என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com