இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை நியமிப்பீர்களா?? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
பிறகு, வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுவின் முக்கிய சாராம்சங்களை வாதங்களாக எடுத்து வைத்தனர்.
இதன்படி மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தைத் தொடங்கி வைத்தார். பல்வேறு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "வக்பு சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா? அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும்? இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா?.. ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துகளை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14,17ஆம் நுற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்புக்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும்" என்று கூறினர்.
இதனைக் கேட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா கூறுகையில், விரிவாகக் கருத்து கேட்ட பிறகுதான் சட்டம் இயற்றப்பட்டது. வக்பு என்று பதிவு செய்யப்பட்டிருந்தால் அது செல்லும். பதிவு செய்யாத எந்த சொத்தையும் வக்பு சொத்தாக பயன்படுத்த முடியாது என்றார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? வக்பு சொத்தை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமானதா? ஏற்கனவே வக்பு என்று பதிந்த சொத்து புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா?. வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும் வக்பு வாரியத்தில் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம் செய்வது செல்லும். ஓய்வுபெற்ற நீதிபதிகளைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
வக்பு சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் பதிலில் திருப்தியில்லை என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தநிலையில், விரிவான பதிலை எழுத்து மூலம் தாக்கல் செய்ய தயார் என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார்.
இந்நிலையில் வக்பு திருத்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை வரை நிறுத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.