ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
இவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனைகளான இன்டா்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக், கிராண்ட்மாஸ்டர் கோனெரு ஹம்பி ஆகியோர் முன்னேறினர்.
இரு இந்திய வீராங்கனைகளும் சனிக்கிழமை மோதிய முதல் சுற்று டிரா ஆனது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிட்டா்ன் கேமில் திவ்யா கருப்பு நிற காய்களுடனும், கோனெரு ஹம்பி வெள்ளை நிறத்துடனும் விளையாடினர். 34 நகா்வுகளுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனா்.
இந்த நிலையில், இன்று டை-பிரேக்கா் சுற்று நடைபெற்றது. இதில், கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
செஸ் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் முதல்முறையாக இரண்டு இந்திய பெண்கள் விளையாடிய நிலையில், 19 வயது திவ்யா தேஷ்முக் முதல்முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார்.