ஜப்பானின் வாஜிமா நகரில் நிலநடுக்கத்தால் பிளந்த சாலைகள்
ஜப்பானின் வாஜிமா நகரில் நிலநடுக்கத்தால் பிளந்த சாலைகள்

ஜப்பான் நிலநடுக்கம்: தென்கொரியா, ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை!

புத்தாண்டு நாளான இன்று ஜப்பானில் உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்த பின்னதிர்வுகளாக 39 முறை ஜப்பான் குலுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானதால், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

அந்நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான இசிகாவா, நிகாட்டா, டோயாமா ஆகியவை சுனாமி எச்சரிக்கை செய்யப்பட்டன. இசிகாவா மாநிலத்தின் வாஜிமா நகரில் வீடுகள் இடிந்து மண்ணில் புதையுண்டன. அங்கு மட்டும் ஆறு இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை ஜப்பான் அரசின் தலைமைச்செயலாளர் யோசிமாசா ஹயாசி ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் என்.எச்.கே. ஊடகத்தில் தோன்றிப்பேசிய பிரதமர் ஃபுமியோ கிசிட்டோ, தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தலைநகர் டோக்கியோவிலும் சில இடங்களில் கட்டடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.

இசிகாவா, டோயாமா பகுதிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ஹோக்குரிகு மின்னுற்பத்தி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இசிகாவாவுக்குச் செல்லும் அதிவேக புல்லட் ரயில்வண்டிகளின் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் சென்ற விமானங்கள் பாதிவழியிலேயே திருப்பிவிடப்பட்டன. நிகாட்டா பகுதிக்குச் செல்லும் விமான சேவையும் ரத்துசெய்யப்பட்டது.

ஜப்பான் கடலையொட்டிய தென்கொரியாவின் கிழக்கு மாநிலமான கேங்வோனில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டது.

இதைப்போல ரசிய நாட்டின் கிழக்குப் பகுதிகளான விளாடிவோஸ்டோக், நகோட்கா பகுதிகளிலும் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com