புதுடெல்லி்யில் இன்று தொடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியமும் உறுப்பினராக சேர்ந்துள்ளது.
முறைப்படியான நடைமுறைகளுக்கு முன்னர், பிரதமர் மோடி தொடக்கமாகப் பேசுகையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தை உறுப்பினராக ஆக்குவதற்கு அடையாளமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரிசையில் அமருமாறு, அதன் தலைவரான காமரோஸ் நாட்டின் தலைவர் அசாலி அசோமணிக்கு அழைப்பு விடுத்தார்.
அதை வரவேற்று ஏற்றுக்கொண்ட அசாலி, பிரதமர் மோடியை நட்புடன் கட்டித் தழுவி இருக்கையில் அமர்ந்தார். பின்னர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரை முறைப்படி இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “ ஆப்பிரிக்க ஒன்றியத்தை உறுப்பு நாடாகப் பெற்றிருப்பதில் பரவசம் அடைகிறோம். உண்மையில் இது இந்த மாநாட்டின் முக்கியமான மைல் கல்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவை மையமாகக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 55 நாடுகள் உறுப்புநாடுகள் உள்ளன. 2002ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியமானது, முன்னதாக வேறு பெயரில் தொடங்கப்பட்டது. விடுதலை அடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பாக, ஆப்பிரிக்க ஒற்றுமைக்கான அமைப்பு எனும் பெயரில் 1963அம் ஆண்டில் 32 நாடுகள் முதலில் ஒன்றிணைந்தன. 140 கோடி மக்கள் வசிக்கும் இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 3 டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.