நெதர்லாந்து நாடாளுமன்றக் கட்டடம்
நெதர்லாந்து நாடாளுமன்றக் கட்டடம்

தேர்தல் முடிந்து 7 மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர்!

டச்சு எனப்படும் நெதர்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த மார்க் ரூட்டே கடந்த ஆண்டு ஜூலையில் பதவிவிலகினார். குடிவரவுக் கொள்கை தொடர்பாக அவருடைய கூட்டணி அரசாங்கம் பிரச்னையை எதிர்கொண்டதால் ரூட்டேவின் அமைச்சரவைக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பதவிவிலக... புதிய அரசாங்கம் வரும்வரை பிரதமர் பதவியில் நீடிக்குமாறு அந்நாட்டின் மன்னர் வில்லெம் அலெக்சாண்டர் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் நெதர்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 150 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தீவிர வலதுசாரிக் கட்சியான பிவிவி கட்சி 37 இடங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அந்த நாட்டில் வலதுசாரிக் கட்சி ஒன்று இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்தது முதல் முறையாகும்.

ஆனால், ஆட்சியை அமைப்பதற்கு குறைந்தது 76 இடங்கள் வேண்டிய நிலையில், விவசாயிகள் குடிமக்கள் கட்சி, தாராளவாத பழமைவாத கட்சி, புதிய சமூக ஒப்பந்தக் கட்சி ஆகியவற்றுடன் பிவிவி கட்சி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியது. 

மாதக்கணக்கில் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால், நான்கு கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்பதற்கு அவை ஒத்துக்கொண்டன.

அதற்குப் பதிலாக நெதர்லாந்து நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான டிக் சூஃப் என்பவரைப் பிரதமராக ஆக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் நெதர்லாந்து மன்னரின் முன்பாக நேற்று பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். 

தஞ்சம் கோரி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துவரும் நிலையில், அதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இப்போதே அறிவித்திருக்கிறார், டிக் சூஃப். இதனால் நெதர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ள அகதிகள், வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com