காசா மருத்துவமனையில் 500 பேர் குண்டுவீச்சால் கொலை
காசா மருத்துவமனையில் 500 பேர் குண்டுவீச்சால் கொலை

காசாவில் கொடூரம்- மருத்துவமனையில் 500 பேரைக் கொன்ற இஸ்ரேல் படை!

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் அரசுப் படைகள் குண்டுவீசித்தாக்கியதில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசா சுகாதார அமைச்சகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. 

காசா நகரில் உள்ள அல் அகிலி மருத்துவமனையானது இஸ்ரேல் அரசப் படைகளின் தாக்குதலால், சின்னாபின்னமாகி உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரே நாளில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேற நிர்பந்தம் செய்ததால், காயம்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோரை விட்டுவிட்டுச் செல்லமுடியாதவர்கள் மருத்துவமனைகளிலேயே தங்கியுள்ளனர். 

பன்னாட்டுப் போர்ச் சட்டங்களை மீறி, இஸ்ரேல் படைகள் நேற்று காசா நகரில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தின. அல் அகிலி மருத்துவமனையில் குண்டுவீச்சால் அங்குள்ள அறைகள் தீப்பற்றி எரிவதையும் சன்னல்கள் கண்டபடி நொறுங்கி சிதைந்திருப்பதையும் ஊடகங்கள் காட்டுகின்றன. 

கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் உடல் உறுப்புகளும் சிதறடிக்கப்பட்ட காட்சியை மனம் உடைந்துபோகக் கூடியவர்கள் காணச்சகிக்க முடியாததாக இருக்கிறது என ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது. 

இத்துடன்,ஐ.நா.வின் பொறுப்பில் இயங்கிவரும் அகதிகள் பள்ளியும் இஸ்ரேல் படையின் கோரத்தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 

அல் மகாசி அகதிகள் முகாம் மீதான இந்தத் தாக்குதலை கொடூரம் எனக் குறிப்பிட்டுள்ளார், ஐநா அகதிகள்ஆணையர் ஜென்ரல் பிலிப் லசாரினி. ஐநா சார்ந்த இடங்கள் உட்பட காசாவில் பாதுகாப்பான இடமென எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இவ்வளவு மோசமான கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை என அதிர்ச்சியுடன் கூறுகின்றனர், பாலஸ்தீனத் தரப்பில்!

இந்த நிலையில்தான், அமெரிக்க அரசின் அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று அதன் தலைநகர் டெல் அவிவ் செல்கிறார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com