ஓமன் நாட்டுக் கடற்கரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மூன்று இந்தியர்கள் காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. அவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டனர் என்பது இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
நேற்று பலாவ் நாட்டுக் கொடியை ஏந்திய 'செட்டபெல்லோ' என்ற வர்த்தகக் கப்பல், ஓமன் வளைகுடாவைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்கப் படை அக்கப்பலைத் தாக்கியது. இதில் 24 இந்திய மாலுமிகள் பயணித்தனர். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளுக்குக் கப்பல் குழுவினர் இணங்கத் தவறியதால், அமெரிக்க இராணுவம் கப்பலின் இயந்திர அறையைக் குண்டுகளால் தாக்கியது.
ஈரானிலிருந்து பெட்ரோலியத்தைக் கொண்டுசெல்வதன் மூலம் அமெரிக்காவின் கட்டளையை மீறியதால், அந்த வர்த்தகக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவையும் அளிக்கும் என்று அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.