நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர்! 34 வயதான ஸோரான் மம்தானி தேர்வு! நேருவை நினைவு கூர்ந்து பதிலடி!

ஸோரான் மம்தானி
ஸோரான் மம்தானி
Published on

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஜோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஸோரான் மம்தானிதான், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயர் ஆனார்

யார் இந்த ஜோரான் மம்தானி?

உகண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸோரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயர் இவரது தாயார் ஆவார். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தை பருவத்தை கழித்த ஸோரான், 7 வயதில் நியூயார்க் நகரில் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.

போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஸோரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன் நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.

அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூயார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது முற்போக்கு கருத்துகளால் இளைஞர்கள் மத்தியில் ஜோரானுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது.

இதனிடையே, ஜோரான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், மேயர் தேர்தலில் ஜோரான் வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் சார்பாக மேயர் தேர்தலில் நிற்க மம்தானி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அக்கட்சியில் இப்போட்டியில் தோற்றுப்போன ஆண்ட்ரூ குவோமோ தனித்துப் போட்டியிட்டார். குடியரசுக் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தி இருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு இல்லாததைக்கண்டு கடைசி நேரத்தில் தனிப் போட்டியாளரான ஆண்ட்ரூ குவோமோவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் அனைத்து ராஜதந்திரங்களும் தோற்று 50.1% வாக்குகளைப் பெற்று மம்தானி தேர்வாகி உள்ளார். இளைஞர், கம்யூனிஸ்ட், இஸ்லாமியர் என்றெல்லாம் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இந்திய பிரதமர் நேருவின் சுதந்திர தின நள்ளிரவு உரையான ’விதியுடனான ஒப்பந்தம்’ என்ற உரையிலிருந்து சில வரிகளை மேற்கோள் காண்பித்தது கவனத்தைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்ல...’ டொனால்டு ட்ரம்ப், என்னோட பேச்சை கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நாலே நாலு வார்த்தை சொல்றேன். Turn the volume up. வால்யூமை கூட்டி வெச்சிக்கங்க..’ என்று கலாய்க்கவும் தவறவில்லை!

logo
Andhimazhai
www.andhimazhai.com