உடைச்சுட்டான்... வடிவேல் மாதிரி வசனம் பேசாத மியூசிய அதிகாரிகள்!
”சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா” என வடிவேலு ஒப்பாரி வைக்கும் பிரண்ட்ஸ் பட காமெடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.
- அந்த காமெடியை நினைவுபடுத்துகிறது, இஸ்ரேலில் நடைபெற்ற சம்பவம் ஒன்று.
வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா நகரில் அமைந்துள்ளது ஹெக்ட் அருங்காட்சியகம். அங்கு பண்டைய காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பே, பொருட்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே எவ்வித தடுப்பரணும் இருக்காது என்பதுதான். பொருட்களை பார்வையாளர்கள் நேரடியாகத் தொட்டு உணரலாம்.
இந்த அருங்காட்சியகத்துக்கு தன் குடும்பத்தினருடன் வந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் செய்த சம்பவம்தான் செய்தியாகி உள்ளது.
ஹெக்ட் அருங்காட்சியகத்தில் கி.மு. 2200- 1500-க்கு இடைப்பட்ட வெண்கல காலத்தைச் சேர்ந்த ஜாடி ஒன்று இருந்தது. அதில் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் ஆவலில், சிறுவன் ஜாடியை இழுத்துள்ளான். அப்போது தவறுதலாக அது கீழே விழுந்துவிட்டது. முழுவதும் உடைந்துவிட்டது.
இதற்காக, அந்தச் சிறுவனின் தந்தை அருங்காட்சியக நிர்வாகத்திடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
பழங்காலப் பொருட்களைப் பதனப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், உடைந்த ஜாடியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த ஜாடி மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என்கிறார்கள், அருங்காட்சியக நிர்வாகத்தினர்!
3,500 ஆண்டுகள் பழமையான இந்த ஜாடியானது, ஒயின், ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர்ப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகப் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விவிலிய மன்னர் டேவிட், அவரின் வாரிசான மன்னர் சாலமன் காலத்திற்கும் முந்தையது என்று கருதப்படுகிறது. இது கிழக்கு மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள கனான் பகுதியின் தனித்துவமான ஒன்று.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்படும் இதுபோன்ற மட்பாண்டங்கள், பொதுவாக, கிடைக்கும்போதே உடைந்திருக்கும் அல்லது முழுமையடையாத நிலையில் இருக்கும். ஆகையால், இத்தகைய உடையாத, முழுமையான ஜாடி ஒரு பொக்கிஷமே!