டீகோ கார்சியா
டீகோ கார்சியா

4 ஆயிரம் கி.மீ. தொலைவில் அமெரிக்க நிலையைத் தாக்கிய ஈரான்!

Published on

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவிவரும் போர்ச் சூழலில் திடீர்த் திருப்பமாக சுமார் 4 ஆயிரம் கி.மீ.தொலைவில் உள்ள அமெரிக்க- பிரிட்டன் இராணுவ நிலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 

முன்னதாக, ஈரானின் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் சேர்ந்து நடத்திவரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தரப்பு நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைத் தாக்குதலை மட்டுமே வலுவாகச் செய்துவருகிறது.

ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் திறன் அதிகபட்சம் 2 ஆயிரம் கி.மீ. தொலைவுவரை துல்லியம் கொண்டது என இதுவரை கூறப்பட்டு வந்தது. இதேசமயம், ஈரான் தரப்பிலோ தங்களின் முழு விசையையும் பயன்படுத்தத் தொடங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரானிலிருந்து சுமார் 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள டீகோகார்சியா தீவில் இருக்கும் அமெரிக்க- பிரிட்டன் இராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு ஏவுகணைகளில் ஒன்று அமெரிக்கப் படையால் இடைமறிக்கப்பட்டதாகவும் மற்றொன்று தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அங்கு என்ன நடந்தது என்பதைவிட, இந்தியப் பெருங்கடல் பகுதி கடல்சார் புவி அரசியல் ஆதிக்கத்தை அந்தத் தீவின் மூலம் செய்துவரும் அமெரிக்க, பிரிட்டன் அரசுகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு தொலைவு கடந்து சென்று துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறனை ஈரான் பெற்றுவிட்டது என்றால், எந்த இடத்திலும் இருக்கும் அமெரிக்கப் படைத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் உணர்த்தியிருக்கிறது என பன்னாட்டு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com