வெள்ளத்தில் மிதக்கும் துபாய்
வெள்ளத்தில் மிதக்கும் துபாய்

வெள்ளத்தில் மிதக்கும் பாலைவன நகரம்!

ஒன்றரை ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் பாலைவன நகரம் என்று அழைக்கப்படும் துபாய் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

துபாயில் நேற்று (ஏப்ரல் 16) பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலையம் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் தடைபட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தண்ணீர் புகுந்து சேவை பாதிக்கப்பட்டது.

ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

விமான நிலையத்தில் உள்ள வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவின்படி 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. துபாயின் ஓராண்டு பெய்யக்கூடிய மொத்த சராசரி மழையளவு இது என ஐ.நா.வும் தெரிவித்துள்ளது.

அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம். துபாயில் நேற்று இரவு முதலே மழை குறைந்தாலும் கூட இன்று ஆங்காங்கே லேசான மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com