ஆசிய- ஐரோப்பிய வான் பறப்பு
ஆசிய- ஐரோப்பிய வான் பறப்பு

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலால் ஆசிய- ஐரோப்பிய விமானப் போக்குவரத்து என்ன ஆகும்?

இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடித் தாக்குதலால், உலகளாவிய விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிய- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வான் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான பதிலடித் தாக்குதலாக, கடந்த சனியன்று ஜாமத்தில் ஈரானியப் படை முந்நூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. சுமார் 1,800 கி.மீ. தொலைவுக்கு ஈரானியப் படைகள் நடத்திய தாக்குதலால், இடைப்பட்ட வான் பரப்பில் பறக்கும் பயணிகள் விமானங்கள் சிக்கவும் வாய்ப்பு இருந்தது. நல்வாய்ப்பாக அப்படி எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடவில்லை.

இந்தத் தாக்குதலால் கடந்த இரண்டு நாள்களாக பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன. ஏர் இந்தியா, லுப்தான்சா, குவாண்டாஸ், யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் உலக வணிக மையத்தின் மீது செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட போக்குவரத்து சீர்குலைவைப் போல, இப்போதுதான் மீண்டும் நடக்கிறது என்று வான்பரப்பு- விமான நிலையங்களைக் கண்காணிக்கும் ஓபிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மார்க் சீ செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாள்களுக்கு இந்தக் குழப்படி நீடிக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் படைத் தாக்குதலாலும், உக்ரைன் - ரசியப் போராலும் வான் போக்குவரத்து அடி வாங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரமும் விமான சேவைத் தொழிலில் மேற்கொண்டு ஒரு பின்னடைவை உண்டாக்கியுள்ளது.

ஆசியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ஈரான் வான் பரப்பின் வழியாகவே நடந்துவருகிறது. இதற்கு மாற்று என்றால், ஒன்று துருக்கி வழியாகவும் மற்றொன்று சவுதி அரேபியா வழியாகவும் என இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஈரானின் தாக்குதலால் சனியன்று தங்கள் வான் பரப்பை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் மறுநாள் காலையில் விமானப் போக்குவரத்தை அனுமதிக்கத் தொடங்கியது.

முன்னதாக, ஜோர்டான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளும் வான் பரப்பை மூடுவதாக அறிவித்து, நேற்றுமுதல் விமானங்களை இயக்கத் தொடங்கிவிட்டன.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உட்பட்ட முன்னணி மைய கிழக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மீண்டும் விமான சேவைகளை இயக்கத் தொடங்கியதாக அறிவித்துள்ளன. முன்னதாக, இவை அனைத்தும் ஞாயிறு அன்று விமானங்கள் இயக்கப்படா எனத் தெரிவித்திருந்தன.

ஆனாலும், ஈரானியத் தாக்குதலால் விமானப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com