‘அமெரிக்கா அழிந்துவிடும்…’ – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வெடித்த டிரம்ப்!

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on

“வரிவிதிப்பு நடவடிக்கையும், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முழுமையாக அழிந்துவிடும்.’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. தேசிய அவசர நிலையை அறிவிக்கவோ, அல்லது உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் வரிகளை விதிக்கவோ டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அமெரிக்கா இறுதியில் வெற்றி பெறும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரிவிதிப்பு நடவடிக்கையும், நாம் ஏற்கனவே பெற்ற டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முழுமையாக அழிந்துவிடும். மேலும் நமது ராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்.

தீவிர இடதுசாரி நீதிபதிகள் குழுவினர் இதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த குழுவில் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஒருவர் மட்டும் நமது நாட்டைக் காப்பாற்ற வாக்களித்துள்ளார். அவரது துணிச்சலுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அமெரிக்காவை நேசிக்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com