ஹமாஸ் – இஸ்ரேல் இடையே அமெரிக்கா, அரபு நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் காசாவில் அமைதிக்கான வாய்ப்புகள் தெரிகின்றன. முதல் கட்டமாக இரு தரப்பும் கைதிகளைப் பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன. அடுத்த கட்டமாக காசாவில் இருந்து ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டு ஒதுங்கவேண்டும்; இஸ்ரேல் தன் படையினரை காசாவில் இருந்து முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும் என்ற கடினமான நடவடிக்கைகள் அடுத்து நடக்க உள்ளன. இப்போது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி இருக்கிறது. உதவிகள் காசாவுக்குள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கின்றன.
கடந்த திங்கள் அன்று இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். இஸ்ரேலிய பணையக் கைதிகளை விடுவிப்பதிலும் போர் நிறுத்த அறிவிப்பிலும் அவர் கொடுத்த அழுத்தம் முக்கியமானது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் குடியரசுத் தலைவராக ஐசாக் ஹெர்சாக் என்பவர் இருக்கிறார். அங்கு பிரதமருக்குத் தான் அதிகாரம். குடியரசுத்தலைவர் பதவி என்பது அலங்காரப்பதவிதான். இந்த ஹெர்சாக்கிடம் ட்ரம்ப் வைத்த ஒரு வேண்டுகோள்தான் இஸ்ரேலில் கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
“குடியரசுத் தலைவர் அவர்களே, ஏன் நீங்கள் பிரதமர் நெதன்யாகுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது?’ என்று தான் ஆற்றிய உரையின்போது கேட்டிருக்கிறார் ட்ரம்ப்.
நெதன்யாகு மீது இப்போது இஸ்ரேலில் மூன்று ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாக விசாரணை நடந்துவருகிறது. எனவேதான் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து பொதுமன்னிப்பு வழங்குங்களேன் என்று ஹெர்சாக்குக்கு கோரிக்கை வைத்துள்ளார் ட்ரம்ப்.
நெதான்யாகு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நேர்நின்றபோது, ’நான் ஒரு போரை நடத்திக்கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் விசாரணைக்குக் கூப்பிடுகிறீர்களே?’ என்ற ரீதியில் அலுத்துக்கொண்டார். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதால் ட்ரம்ப் பொதுமன்னிப்பை முன் வைத்துள்ளார். என்ன இருந்தாலும் ’பிபி’(நெதன்யாகுவின் செல்லப்பெயர்) நண்பரல்லவா?
இஸ்ரேல் பிரதமருக்குப் பொதுமன்னிப்பு வழங்க குடியரசுத் தலைவரால் முடியுமா?
1984 ஆம் ஆண்டு. பாலஸ்தீனப் போராளிகள் பேருந்து ஒன்றைக் கடத்தினர். இஸ்ரேல் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் ஆட்கள், பேருந்தின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றி அந்த கடத்தலை முறியடித்தனர். அதில் நான்கு பாலஸ்தீன போராளிகள் சண்டையின்போது கொல்லப்பட்டனர் என ஷின் பெட் சொன்னது. ஆனால் இறந்தவர்கள் இரண்டு பேர். மீதி இருவரை அந்த படையினர் உயிருடன் பிடித்தனர். அதன் பின்னர் அவர்களை அடித்து சித்திரவதை செய்து கொன்றனர். இந்த தகவல் பினர் வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக அப்போதைய ஷின் பெட் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணையின்போது மேலதிகாரிகள் தொடர்பு வெளிவந்தபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் ஷின் பெட் அதிகாரிகளுக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கினார். இது தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று காரணம் கூறினார். இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டாலும் அந்த வழக்கு தள்ளுபடி ஆனது.
ஆகவே நெதன்யாகுக்கு ஊழல் வழக்கில் பொதுமன்னிப்பு வழங்கமுடியுமா? ஆனால் அது தேசப்பாதுகாப்பு என்றதால் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. இது தனிப்பட்ட ஒருவரின் நடத்தை தொடர்பானது என்பதால் செல்லுபடி ஆகாது என்று கூறப்படுகிறது.
அதான் ட்ரம்பே.. இஸ்ரேலோட சூப்பர் அதிபரே சொல்லிட்டார் கொடுத்திரவேண்டியதுதானே?
1984-இல் ஷின் பெட் அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய குடியரசுத்தலைவரின் பெயர் செயிம் ஹெர்சாக். ஆமாம்.. அதேதான். இப்போதைய குடியரசுத் தலைவரின் அப்பாதான் அவர். வரலாறு மீண்டும் திரும்பாமலா இருக்கும்?