இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனின் திருமணம் நடந்த பிரம்மாண்டமான கிரீஸ் நாட்டு ஹோட்டல் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்நாட்டில் ஏதென்ஸ் நகரில் இருக்கும் பிரம்மாண்டமான 'போர் சீசன்ஸ் அஸ்டிர் பேலஸ்' ஹோட்டல்தான் இந்த கோலாகல திருமணம் நடந்த இடமாகும்.
ஏதன்ஸ் நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஏஜியன் கடலைப் பார்த்தவாறு, வவுலியாக்மெனி தீபகற்பத்தில் அமைந்துள்ளது இந்த நட்சத்திர ஹோட்டல். ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 30 நிமிடம் பயணித்தால், இந்த ஆடம்பர சொகுசு ஹோட்டலை அடைந்துவிடலாம்.
இந்த ஹோட்டல் 75 ஏக்கர் பரப்பளவில் பசுமையான பைன் மரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. முதன்முதலாக 1960ஆம் ஆண்டு, அஸ்டிர் பேலஸ் என்று தொடங்கப்பட்ட இந்த நட்சத்திர ஹோட்டல், கடந்த 2019ஆம் ஆண்டு நவீனமயமாக்கப்பட்டது.
இந்த ஹோட்டலில், 300-க்கும் மேற்பட்ட அறைகள், சூட் எனப்படும் மிகவும் விசாலமான அதிக அறைகளைக் கொண்ட வசதியான இடங்கள், கடற்கரையோர தனி பங்களாக்கள் ஆகியவை உள்ளன.
இந்த ஹோட்டலில் உள்ள ஒவ்வொரு அறையில் இருந்தும் ஏஜியன் கடலை ரசிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இங்கு உயரிய, மிகவும் மதிப்புமிக்க சமையல் தர விருதான மிச்செலின் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற பிரத்யேக உணவகங்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று தனியார் கடற்கரைகள், பிரம்மாண்ட நீச்சல் குளங்கள், பண்டைய கிரேக்க மருத்துவ முறைகளை பின்பற்றும் ஆடம்பர ஸ்பா, தனி ஹெலிபேட், படகுத்துறை வசதிகள் என்று அடுக்கிக்கொண்டே போகும் அளவிலான கிரேக்கப் பாரம்பரியமும், நவீன ஆடம்பரமும் இணைந்து இந்த ஹோட்டலில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஹோட்டல் தொடங்கப்பட்ட காலம் முதலே, அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி, புகழ்பெற்ற பாடகர் ஃபிராங்க் சினாட்ரா உட்பட்ட பலரின் விருப்பமான ஓய்விடமாக இந்த ஹோட்டல் இருந்துள்ளதாக குறிப்பிடுகின்றது.
பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் தங்குமிடங்களின் விலை விண்ணை எட்டும் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ. 65,000 முதல் கட்டணம் தொடங்குகிறது. அம்பாசடர் சூட் என்ற ஓர் அறைக்கு ஓரிரவு வாடகை 11 லட்சம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆடம்பர அறையின் பரப்பளவு 228 சதுர மீட்டர் வரை இருக்கும். அறை வாடகைகள் சீசனுக்கு ஏற்ப மாறுபடும்.
அமைதியாகவும், மிகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால், இந்த நட்சத்திர ஹோட்டல் பல்வேறு பிரபலங்களின் கொண்டாட்டத்திற்கான தேர்வாக உள்ளது.