தூம்ஸ்டே பனிப்பாறை
தூம்ஸ்டே பனிப்பாறை

அண்டார்ட்டிக்கா - 200 ஆண்டுகளில் 1,476 அடி உயர பனிப்பாறைக்கு ஆனது என்ன?

அண்டார்ட்டிக்கா கண்டத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தகவல் ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்ல சூழல் காப்பாளர்களிடமும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கு அண்டார்ட்டிக்காவில் தூம்ஸ்டே பனிப்பாறை மிக வேகமாக உருகிவருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து எச்சரிக்கை வெளியிட்டனர். பனி உருகினால் கடல் மட்டம் உயரும்; உலகின் பல நாடுகளின் பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஆனாலும், உலக அளவில் புவி வெப்பமயமாதல் எல்லையை மீறும்படியாக மனிதர்களின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன.

இந்த நிலையில், அண்டார்ட்டிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு, பனிப்பாறைகள் உருகுவது புதியதாக- கவலை அளிக்கும்படியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. கடல் மட்டம் உயரும் ஆபத்து எதிர்பார்க்கப்பட்டதைவிட பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கவலைதெரிவித்துள்ளனர். 

கிரௌண்டிங் லைன் எனப்படுகின்ற கடல் படுகையில் பனி உருவாகி அடுக்கத் தொடங்குகின்ற புள்ளியும் அது மிதக்கத் தொடங்கும் புள்ளியும் இணையும் பகுதியில், வெதுவெதுப்பான கடல் நீர் கசிவை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். 

பெருங்கடல் பகுதிகளின் வெப்பநிலை அதிகரிப்பால் பனிப்பாறை உருகுவதும் அதிகரிக்கும் என்றும் அண்மைக்காலமாக குறிப்பாக கடந்த ஓராண்டில் பெருங்கடல் வெப்பநிலை வேகமாக அதிகரித்துள்ளது என்றும் இந்தப் புதிய மாற்றத்தால் கடல் நீர் மட்டம் இன்னும் உயரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு அண்டார்ட்டிக்காவின் அந்தப் பனிப்பாறை 200 ஆண்டுகளில் 450 மீட்டர் அதாவது 1,476 அடி உயரம் அளவுக்கு அதாவது அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தைவிட உயரம் கொண்டதாக இருந்தது, உருகி சுருங்கிவிட்டது என்பதை கடந்த பிப்ரவரியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதிலிருந்தே அண்டார்ட்டிக்கா ஆய்வாளர்கள் பனிப்பாறை உருகும் வேகம் மிக அபாயமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், வெதுவெதுப்பான நீர் பனிப்பாறை அடுக்கின் கீழ் கண்டறியப்பட்டிருப்பது உருகுவதை மேலும் வேகப்படுத்தும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். 

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப்போல நிகழ்ந்ததாகவும் ஆனால் இப்போது இவ்வளவு குறுகிய காலத்தில் பனி உருகியிருப்பது உலக நாடுகள் அனைத்துக்குமே எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறது. 

சென்ற மே மாதத்தில் தொடர்ந்து 14ஆவது ஆண்டாக பூமியின் பெருங்கடற் பரப்பு வெப்பநிலை மிக அதிகமாகப் பதிவானதையும், கடந்த 50 ஆண்டுகளில் மேற்கு அண்டார்டிக்கா பகுதியில் பூமியின் அதிவெப்பமயமாகும் பகுதிகளில் ஒன்றாக மாறிவருவதையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். 

அதிவேகமாக புவிவெப்பமயமாக்கலைக் குறைக்காவிட்டால், அதிவேகமாக கடல் மட்டம் உயர்வதைத் தடுக்கமுடியாது என்கிறார்கள் அண்டார்ட்டிக்கா ஆராய்ச்சியாளர்கள்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com