அண்டோனியோ நிக்ரி
அண்டோனியோ நிக்ரி

இத்தாலியில் சிறை; பாரிஸில் அடைக்கலம்! மார்க்சிய அறிஞர் அண்டோனியோ நிக்ரி(1933-2023)

மார்க்சிய தன்னாட்சியியல் கோட்பாட்டாளரான அண்டோனியோ நிக்ரி, தன்னுடைய 90 ஆவது வயதில் கடந்த 16 ஆம் தேதி காலமானார். இத்தாலியைச் சேர்ந்த முக்கியமான அரசியல் தத்துவவியலாளரும் மார்க்சிய சிந்தனையாளருமான நிக்ரி, மைக்கேல் ஹார்ட் என்கிற எழுத்தாளருடன் இணைந்து முக்கியமான நூல்களை எழுதி உள்ளார். அவை சர்வதே அளவில் அரசியல் இயக்கங்கள், தத்துவக் கொள்கைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளாக அமைந்து பெரிதும் விவாதிக்கப்பட்டவை. இவரது நூல்களின் இணை ஆசிரியரான மைக்கேல் ஹார்ட் நிக்ரியைவிட முப்பது வயது இளையவர்.

அண்டோனியோ நிக்ரி, இத்தாலியில் உள்ள பதுவா பல்கலைக்கழகம், பிரான்ஸில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிக்ரி பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். கல்வித்துறை தாண்டிய அறிவுசார் ஆய்வுகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் நிக்ரி அறியப்படுகிறார்.

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனையாளரான ஸ்பைனோசாவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு உருவான நவீன ஸ்பைனோசிய  சிந்தனைகளில் முன்னணியில் இருப்பவராக கருதபட்டவர் நிக்ரி. இவருடன் இந்த சிந்தனைமரபில் இணைந்தவர்கள் புகழ்பெற்ற சிந்தனையாளர்களான அல்தூசர், தெல்யூஸ் ஆகியோர்.

உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களுக்கு முதலாளி வர்க்கம் ஆற்றும் எதிர்வினைகளை ஆராயும்  தொழிலாளரிய சிந்தனைகளை 1970களில் அவர் முன்வைத்தார். தீவிர இடதுசாரிகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கைதாகி 1984-இல் தனக்குத் தொடர்பில்லாத குற்றத்துக்காக தண்டனை வழங்கப்பட்டு சிறையிலிருந்த அவர், எம்பியாக தேர்வு செய்யப்பட்டு நான்காண்டு கழித்து வெளியே வந்தார். ஆனால் அவரது தண்டனை நீக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் சிறைக்குச் செல்லாமல் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்குதான் இளம் மாணவரான மைக்கேல் ஹார்ட்டை சந்தித்தார். 1997-இல் இத்தாலி திரும்பிய அவருக்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டு 2003-இல் விடுதலையானார். அவரும் மைக்கேல் ஹார்ட்டும் இணைந்து எழுதிய முக்கியமான நூல் Empire ஆகும். இந்நூல் கம்யூனிச அறிக்கையின் நவீன கால மறு சிந்தனையாக்கம் என கருதப்பட்டது. உலக அளவில் மிகவும் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டப்பட்ட நூல் அது.

உலக மயமாக்கலின் பின்னணியில் புதிய பன்முகத் தன்மை கொண்ட வர்க்கம் உருவாகிறது என்கிற இவரது கொள்கை இக்காலகட்டத்தில் கவனத்துக்கு உள்ளானது. Multitude: War and Democracy in the Age of Empire  என்ற நூலை 2004-இல் ஹார்ட்டுடன் இணைந்து வெளியிட்டார். இந்த வரிசையில் 2009-இல் Commonwealth என்ற நூலை மூன்றாவதாக வெளியிட்டார்.

2012-இல் Declaration என்ற அறிக்கையை வெளியிட்டார். அது உலகெங்கும் நடந்துகொண்டிருந்த மக்களின் அமைதியான ஆக்கிரமிப்புப் போராட்டங்களை ஆய்வு செய்து எழுதப்பட்ட அறிக்கை. இந்த கூட்டு அரசியல் போராட்ட நடவடிக்கை பற்றி Assembly என்ற நூலையும் எழுதினார். சமகால அரசியல் நடவடிக்கைகள் பற்றிய சிறந்த ஆய்வாக இந்நூல் கருதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com