பிரான்ஸ் திருப்பம்... திசை திரும்புமா?
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் பொதுத் தேர்தலில் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிக் கூட்டணி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றிலும் அந்தக் கூட்டணியே முன்னிலை பெற்றால் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உண்டு.
மொத்தம் 577 இடங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு, 2027ஆம் ஆண்டுவரை பதவிக்காலம் உள்ளது. ஆனாலும் கடந்த மாதம் முன்கூட்டியே நா.ம. தேர்தலை அறிவித்தார் அந்நாட்டின் அதிபர் மேக்ரான்.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரான்சின் தீவிர வலதுசாரிக் கட்சிகளே அதிக இடங்களில் வெற்றிபெற்றன. இதனால் பிரான்சை ஆளும் கூட்டணியின் மையவாதக் கட்சியான மறுமலர்ச்சிக் கட்சித் தலைவரான மேக்ரான், தங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலையும் அறிவித்தார்.
அதன்படி, முதல் சுற்றுத் தேர்தல் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது. அதில், வலதுசாரிக் கூட்டணிக்கு 33.2 சதவீத வாக்குகளும், இடதுசாரிக் கூட்டணிக்கு 28.1 சதவீத வாக்குகளும், ஆளும் கட்சிக்கு 21 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் காழ்ப்பும், அகதிகள், தஞ்சம்புகுந்தவர்கள் மீதான கோபம், சகிப்பின்மை என பரவலாக ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி கட்சிகளின் கொள்கைகளுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், பிரான்சின் இந்தத் தேர்தல் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
அந்நாட்டைப் பொறுத்தவரை முதல் சுற்றில் 12.5 சதவீதம் வாக்குகள் பெறாதவர்கள் இரண்டாம் சுற்றுக்குப் போகமுடியாது. மொத்தத்தில் 50 சதவீத வாக்குகள் அல்லது மொத்த வாக்காளர்களில் கால் பகுதியினரின் வாக்குகளைப் பெற்றால்தான் எவரும் வெற்றிபெற முடியும்.
வரும் 7ஆம் தேதி ஞாயிறன்று நடைபெறும் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கூட்டணியின் கை ஓங்குமானால், அவர்களே ஆட்சியமைப்பது உறுதி. எனவே, இதைத் தடுக்கும்வகையில் இடதுசாரி, மையவாதக் கூட்டணிகள் அதிக வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் பரஸ்பரம் தங்கள் வேட்பாளரை விலக்கிக்கொள்வது என முடிவெடுத்திருக்கின்றன.
கடைசி நேரத்தில் எடுக்கப்படும் இந்த முடிவு, பிரான்சில் அரசியல் மாற்றத்துக்கு வித்திடுமா என்பது பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.