கனடாவில் பஞ்சாபிப் பாடகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!
கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பஞ்சாபிப் பாடகர் ஏபி தில்லான். பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் இவரின் வீடு உள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து காணொலி ஒன்றில் தில்லான் தோன்றியது சர்ச்சைக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து தில்லான் வீட்டின் மீது உள்ளூர் நேரப்படி திங்கள் அதிகாலையில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.
பதினான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இதில் தங்கள் குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்று தில்லான் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள மும்பை தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அதன் உறுப்பினராகக் கூறிக்கொள்ளும் ஒருவர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோல பாப் பாடகர் ஜிப்பி கிரேவல் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.