செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேச ஜோடி! நடந்தது என்ன?

Bangaladesh man executed in Saudi
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேச இளைஞர்
Published on: 

செளதி அரேபியாவின் மெக்காவில், தகாத செயலில் ஈடுபட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, வங்கதேசத்தில் இருந்து வேலைக்காக செளதி அரேபியா சென்றுள்ளார் 22 வயதான நஸ்ருல். இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் அவருக்கு உள்ளனர். இவர் செளதியின், ரியாத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார்.

வேலைக்குச் சென்ற 6 மாதங்களில், மெக்கா மசூதி வளாகத்தில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல், அவருடன் பழக்கமான சித்தி அக்தர் என்ற பெண்ணையும் செளதி போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக செளதி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட ஆண்,பெண் இருவரும் மசூதியின் புனிதத்தன்மைக்கு களங்கம் விளைவித்ததால், தாசிர் எனப்படும் இஸ்லாமிய விதியின்படி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செளதி அரசு கூறியுள்ளது.

மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த வங்கதேச இளைஞர் நஸ்ருல், ஒவ்வொரு வாரமும் சிறிது நேரம் அவருடைய குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மெக்காவில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்த எந்தவொரு தகவலையும் அவர்களின் பெற்றோரிடமோ, வங்கதேச அதிகாரிகளிடமோ, வங்கதேசத் தூதகரத்திடமோ செளதி அரசு முன்னரே தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் கூறியதாவது:

"செளதி அரேபியாவின் சிறைகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். செளதி அரேபிய அரசு அவ்வப்போது அவர்களின் அடையாள விவரங்களை அனுப்பு வருகிறது.

இதன் மூலமாக யார், எப்போது, எந்தச் சூழலில் கைது செய்யப்பட்டார்கள், தற்போது சிறையில் உள்ளார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரின் பெயர்களும் அந்தப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்து வருகிறோம். அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதுதான் எங்களுக்குத் தெரியும்." என்று ஷமா ஒபைத் தெரிவித்தார்.

இருப்பினும், வங்கதேசத் தூதரகம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்து வங்கதேசத் தூதரக அதிகாரிகளும், வங்கதேச அரசும் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மரண தண்டனை நிறைவேற்றப்படுவது போன்ற உறுதிப்படுத்தப்படாத காட்சிகள், அது தொடர்பான விவாதங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com