மாஸ்கோவில் கருப்பு மழை!

black rain  at moscow
மாஸ்கோவில் கருப்பு மழை பெய்தது.
Published on

மாஸ்கோவின் கபோட்னியா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் சுற்றுச்சூழல் மாசடைந்து கருமையான, எண்ணெய் கலந்த தூறல் பெய்துள்ளது.

மாஸ்கோவின் பெட்ரோல் தேவையில் சுமார் 40 சதவீதத்தையும், டீசல் தேவையில் பாதியையும் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்பட்ட பெரும் தீயைத் தொடர்ந்து, மாஸ்கோவின் சில பகுதிகளில் வசிப்பவர்களின் கார்கள், சாலைகள், ஆடைகளில் கருப்புக் கறைகள் காணப்பட்டதாக அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

இது பொதுவாக 'கருப்பு மழை' பெய்ததால் ஏற்படும் பாதிப்பாக கருதப்படுகிறது.

பொதுவாக புகை, கரி, சாம்பல், காற்றில் மிதக்கும் பிற மாசுகளால் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்துடன் இவை கலந்து, பின்னர் மழையாகத் தரையில் விழும்போது கருப்பு மழை ஏற்படுகிறது.

தெளிவான மழைத்துளிகளுக்குப் பதிலாக, மழையில் கார்பன், எரியாத ஹைட்ரோகார்பன்கள், பிற மாசுகளின் மிகச்சிறிய துகள்கள் இருப்பதால், அது கருமையான தோற்றத்தைக் கொடுக்கும் அல்லது ஆவியான பிறகு கருப்புக் கறைகளை அது விட்டுச்செல்லும்.

பெரிய தொழிற்சாலைத் தீ விபத்துகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத்தீ, போர்க்காலத்தில் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் இந்த பாதிப்பு ஏற்படும்.

இதற்கு முன்னர் 1945-ல் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, ​​கதிரியக்கப் புகையும் சாம்பலும் மழை மேகங்களுடன் கலந்து கருப்பு மழை பொழிந்தது.

உண்மையில் வானத்திலிருந்து கருப்பு மழை பொழிவது இல்லை என்றும், இது தீயினால் உருவாகும் வான்வழி மாசுபாட்டால் மாசடைந்த ஒரு மழைப்பொழிவுதான் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொருட்களின் தன்மையைப் பொறுத்து கண்கள், தோல், சுவாச மண்டலத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகள், முதியவர்கள், ஆஸ்துமா அல்லது பிற நுரையீரல் நோய் உள்ளவர்கள் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com