போயிங்... சோதனை மேல் சோதனை!
போயிங் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விபத்துகளில் 346 பேரை பலிகொண்டது தெரிந்ததே!
இன்றுவரை உலக அளவில் ஒரு முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமாக இருந்துவந்தாலும், ஒட்டுமொத்த வான் போக்குவரத்துக்கான பல மென்பொருள்களையும் போயிங் நிறுவனமே உற்பத்தி செய்துதருகிறது. என்னதான் முன்னணியில் இருந்தாலும் இந்த நிறுவனம் தொடர்ந்து சறுக்கல்களையும் சந்தித்துவருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று இந்தோனேசியாவின் லையன் ஏர் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்கு உள்ளானது; அதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
அடுத்த ஐந்தாவது மாதத்தில், 2019 மார்ச் 10 அன்று எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இதே வகை விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து, 2020 டிசம்பர்வரை போயிங் 737 மேக்ஸ் வகை விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டன.
பின்னர், கடந்த ஜனவரியில் அலாஸ்கா ஏர்லைன்சுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் 16ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் கதவு கழன்று விழுந்துவிட்டது. நல்லவேளை அது பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதனால் விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதனிடையே, டெக்சாஸ் மாநில நீதிமன்றம் ஒன்றில் 737 மேக்ஸ் விமானங்கள் தொடர்பாக அரசை ஏமாற்ற சதியில் ஈடுபட்டதாக போயிங் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டால் ஏராளமான தொகை அபராதமும் கடும் தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், போயிங் தரப்பில் தங்களின் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரிமினல் வழக்கைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
இதேசமயம், இணக்கப்பாடாகவும் பாதுகாப்பு செயல்திட்டங்களுக்காகவும் அந்த நிறுவனம் 45.5 கோடி டாலர்களை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அரசுத் தரப்பில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த மாற்றங்களை ஆய்வுசெய்வார்கள். இத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை போயிங் தாப்பினர் சந்திக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த விசாரணையில்தான் தெரியவரும்.
இந்த நிலையில், நேற்று திங்களன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து அந்நாட்டின் டென்வருக்குப் புறப்பட்ட யுனைட்டட் ஏர்லைன்சின் போயிங் 757-200 வகை விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் ஒரு சக்கரம் கழன்று விழுந்துவிட்டது. ஆனால், திட்டமிட்டபடி டென்வரில் அது தரையிறங்கியது. பறப்பின்போது அதிலிருந்த 174 பயணிகள், 7 பணியாளர்களும் லேசாகக் காயமடைந்தனர்.
என்னடா இது... போயிங்குக்கு சோதனைமேல் சோதனை!