‘பயங்கரவாதத்துக்கு பரிசு…’- பாலஸ்தீனம் தனி நாடாகாது -நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Published on

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்துள்ளன.

இதை “ஹமாஸுக்கு அளிக்கப்பட்ட பரிசு” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என பல்வேறு உலக நாடுகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்டன் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

கியா் ஸ்டாா்மா், மாா்க் காா்னி,  ஆண்டனி ஆல்பனேசி
கியா் ஸ்டாா்மா், மாா்க் காா்னி, ஆண்டனி ஆல்பனேசி

இதுதொடர்பாக கனடா பிரதமர் மாா்க் காா்னி நேற்று, வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே 1947-ஆம் ஆண்டுமுதல் கனடா அரசின் கொள்கையாகும்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரிக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு அமைதியான எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் தனது பங்களிப்பை கனடா வழங்கும். அதேவேளையில், இந்த அங்கீகாரம் ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல. அமைதியான கூட்டு வாழ்வுக்கு உகந்த சூழல் ஏற்பட வேண்டும், ஹமாஸ் அமைப்பு முடிவுக்கு வரவேண்டும் என்று கருதுவோருக்கு இந்த அங்கீகாரம் துணை நிற்கும்’ என்றார்.

பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலியில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொடூரங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியத்தையும், இஸ்ரேல்-பாலஸ்தீனத்தை இரு வேறு நாடுகளாக அறிவிக்கும் இருதேச தீர்வுக்கான சாத்தியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பிரிட்டன் கருதுகிறது. எனவே, அமைதி மற்றும் இருதேச தீர்வுக்கான நம்பிக்கைக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் முறைப்படி அங்கீகரிக்கிறது.

பிரிட்டன் ஆதரிக்கும் நோ்மையான இரு தேச தீா்வு என்பது ஹமாஸ் படையின் வெறுப்புணா்வு கொண்ட கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறானது. இந்தத் தீா்வு ஹமாஸுக்கு அளிக்கப்படும் பரிசல்ல. ஹமாஸுக்கு எதிா்காலம் இல்லை. ஆட்சியமைப்பதில் அவா்களுக்குப் பங்கிருக்காது என்பதே இதன் அர்த்தம்’ என்றாா்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி வெளியிட்ட அறிக்கையில், ‘பாலஸ்தீனத்தை சுதந்திர, இறையாண்மை கொண்ட நாடாக ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது. பிரிட்டன், கனடாவுடன் சோ்ந்து ஆஸ்திரேலியா அளித்துள்ள இந்த அங்கீகாரம், இருதேச தீா்வுக்கு புதிய வேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சா்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும். பாலஸ்தீனத்தில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பாலஸ்தீனம் தனி நாடாகாது: இஸ்ரேல் பிரதமா்

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா அங்கீகரித்தது ஹமாஸுக்கு அளிக்கப்பட்ட பரிசு என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சாடினாா். பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகாது என்று தெரிவித்த அவர், அடுத்த வாரம் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்த பின், தற்போது அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்துக்கு இஸ்ரேலின் எதிர்வினை என்ன? என்பது அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com